தனித்து நிற்கும் மரபின் களரி மெலிஞ்சிமுனை – மெலிஞ்சிமுத்தன்

1,014

தனித்து நிற்கும் மரபின் களரி மெலிஞ்சிமுனை  மெலிஞ்சிமுத்தன்

ஈழ நாட்டாரின் கலைச் செயற்பாடுகளை ஆராயும்போது மட்டக்களப்பில் வடமோடி, தென்மோடி கூத்துகளும், விலாசங்களும். மன்னார்ப் பகுதியிலே கிறிஸ்த்தவ அடிப்படையில் அமைந்த வடபாங்கும், தென்பாங்கும், சபாக்களும், வாசாப்புகளும். முல்லைத்தீவில் வடமோடி, தென்மோடி, சிந்துநடைக்கூத்துகளும், யாழ்ப்பாணத்தில், தென்மோடி, வடமோடி, காத்தான் கூத்துகளும். நீர்கொழும்பு தொடங்கி புத்தளம் வரையுள்ள பகுதிகளில் யாழ்ப்பாண, மட்டக்களப்பு ஆட்டமுறைகளிலிருந்து சற்று வித்தியாசமான கூத்துகளும், மலைநாட்டில் காமன், அருச்சுதன் தபசு போன்ற கூத்துகளும் இருந்துவருகின்றன.

இக்கூத்துகள் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்டு நின்றாலும் ஈழத்தின் தனித்துவத்தைப் பொதிந்து வைத்திருக்கும் கலை வடிவமாக தென்மோடிக் கூத்து வடிவத்தையே முன் நிறுத்துதல் பொருத்தமாகிறது. 

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் நிகழ்த்தப்பட்டுவந்த தென்மோடிக் கூத்துகள் காலத்துக்குக் காலம் தன்னிலை மாற்றமடைந்து வந்த தடங்கள் வரலாற்றின் பதிவுகளில் காணக் கிடைக்கின்றன. இந்த மாற்றங்களின் தன்மை அடிப்படைகளை வைத்துக்கொண்டே மெலிஞ்சிமுனைக் கூத்தின் தனித்துவத்தை நாம் இனங்கண்டுகொள்ளலாம்.

பொய்த்துப்போன வானத்தைப்பார்த்து குரலெழுப்பி, கடலைப்போல, நெருப்பைப்போல உடலசைத்ததிலிருந்து தோன்றியது கலை என்கின்றனர் ஆய்வாளர்கள். இயற்கையைப் போலச் செய்ததிலிருந்து தோன்றியிருக்கலாம் புராதனக் கலைகள் என்றும், இறைவழிபாட்டின் மந்திரத்தன்மையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சொல்கின்றனர். மெலிஞ்சிமுனைக் கூத்துகளின் நிகழ்த்து முறைகளை உற்றுக் கவனித்தாலே இவை இரண்டு தன்மைகளும்  மறைந்து கிடப்பதைக் கண்டுணரலாம்.


கிறிஸ்து அரசர் ஆலயம் – மெலிஞ்சிமுனை

தமிழில் ‘மெலிஞ்சியர்’ எனும் சொல் ‘கோயில் காப்பாளர்’ எனும் அர்த்தத்தைக் கொண்டதாக இருக்கிறது. இந்த அர்த்தம் பொய்த்துப்போகாத தன்மைகொண்டதாக மெலிஞ்சிமுனையில் நீண்டு வருவதையும் அவதானிக்க முடியும். தீவகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த இன்றைய மெலிஞ்சிமுனையின் முன்னோர் பல தேவாலயங்களைக் கட்டும் பணிகளில் ஈடுபட்டு பங்குதாரர்களாகவும், மெலிஞ்சிமுனையில் குடியேறிய பின்னரும் செல்லுமிடமெல்லாம் ஆலயம் கட்டும் மன ஆர்வத்தைக் கொண்டவர்களாகவும்  இருந்துவந்ததற்கு தீவகத்தின் வெவ்வேறு ஆலயங்கள் இன்றும் சாட்சிகளாக நிற்கின்றன. 

இன்னொரு வகையில் நயினாதீவோடும், ஊருண்டியோடும் தொடர்புபட்ட மக்கட் பரம்பலாகவும் இனங்காணக் கூடிய பரம்பரைத் தொடர்புகளையும் இங்கு அவதானிக்கலாம்.

ஆலயத்தை மய்யப் படுத்திய வாழ்க்கை, கலை, பண்பாடு என்று வாழும் இம்மக்களின் தென்மோடிக் கூத்துக் கலையை ஆராய மேற்படி நிலைப்பாடுகளை கருத்திற்கொண்டு ஆராய்தலே இக்கலைப் பரம்பரைக்குக் கொடுக்கக்கூடிய உண்மையான மதிப்பீடாய் இருக்க முடியும்.

நீண்ட கூத்து மரபின் தொடர்ச்சியான ‘காவிகளாக’ வந்த மக்கட் பரம்பல் கூடிக் கருக்கட்டிய இடமே மெலிஞ்சிமுனை எனும் தளமாக அமைந்தபோது இம்மக்கள் கூட்டத்தின் கலை ஆழுமையாக இவர்களின் கலையை வீச்சோடு முன் வைத்தவர் ‘கலைக் குருசில் நீ. வ. அந்தோனி’ அண்ணாவியார். இவரின் காலப்பகுதியை மெலிஞ்சிமுனைக் கூத்தின் எழுச்சி மிக்க காலம் என்று மட்டுமல்லாமல், ஈழத்தாரின் கலை வரலாற்றின் முக்கியமான காலம் என்றும் சொல்லலாம். 

யாழ்ப்பாணம் மன்னார் மாவட்டங்களின் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அங்கேயே தங்கி பல கூத்துக்களையும், கலைஞர்களையும் உருவாக்கிய அந்தோனி அண்ணாவியார் சுமார் இருபத்தி ஐந்து கூத்துகளுக்கு மேல் மேடையேற்றியதோடு மெலிஞ்சிமுனைக் கூத்துக்கான மிக உறுதியான கலை அத்திபாரம் ஒன்றினையும் போட்டு ஐந்து தலைமுறைகளைத் தாண்டியும் அதன் நீட்சி வலுப்பெறுவதற்கான உந்துவிசையாகவும் இருந்தார்.

ஐரோப்பிய ‘மெலேன்’ டிராமா மரபை உள்வாங்கிய பம்பாய் ‘பார்சி’ நாடகக் கம்பனி இந்தியாவில் மேற்கத்தைய மரபு நாடகங்களை மேடையேற்றியதன் விளைவாகப் பார்சித்தியேட்டர் மரபு தமிழகத்திலும் அறிமுகமாகி தமிழ் நாடக மரபிலமைந்த நாடகங்களே இசை நாடகங்களாயின. இவ்வகை நாடகங்களை அண்ணாவி மரபு நாடகம், கொட்டகைக்கூத்து, ஸ்பெசல் நாடகம், டிறாமா மோடி, இசை நாடகம் என பலவாறு அழைப்பர். இதிலிருந்து உருவமைத்துக்கொண்ட தமிழகத்து சபாக்கள் பல இலங்கை வந்தன. பின்னர் நிரந்தர மடுவங்கள் உருவாகி இலங்கையிலும் ஒரு நாடக மரபாய் தோற்றம்பெற்றது. 


மெலிஞ்சிமுனை கூத்துக் கலைஞர்கள் – 1969

இந்த நாடக மரபின் எழுச்சி வி.வி. வைரமுத்து எனும் பெருங்கலைஞனின் காலத்தில் முகிழ்த்தது. மூவாயிரம் மேடைகளையும் தாண்டி ‘அரிச்சந்திர மயான காண்டம்’ நிகழ்த்தப்பட்டகாலத்தில் ஒட்டுமொத்த இலங்கையின் இரசிகப் பட்டாளமும் அலையலையாய் இசைநாடகப் பக்கம் திரும்பியபோதும், பல கிராமங்களின் கூத்துக்கலைஞர்கள் இசை நாடகப் பாங்கை உள்வாங்கிப் பாடியபோதும் மெலிஞ்சிமுனையில் அந்தோனி அண்ணாவியாரும் அவருடன் இயங்கிய கலைஞர் படையும் பிடிவாதமாய் தென்மோடியின் உயிர்ச் சாரத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு களரி கட்டினர்.

அவர்களில் தீயோகு, நீக்கிலார், மோசேஸ், மரியார், யாக்கோப்பர், சுவானி, சுவாம், வலோரியார், அவுறார், வயித்தியார், அருளப்பர், கிருத்தோவர், சலமோன், கி. இன்னாசி, அ.லுக்கேஸ், அதிரியார், சந்தியாகு, இசிதோர், தீ.பிரகாசம், ‘பவூன்’ பாவிலு, சூசைமுத்து, சந்தியாக்குட்டி, சு. வயித்தியார், பேதுறு, ம. வயித்தியார், சுவக்கீன், அ. வயித்தியார், ம.அந்தோனி, அ. பத்திநாதன், மனேச்சர் சூசை, கா. மனுவல், இ. மத்தியாஸ், அ. மடுத்தீஸ், செபமாலை, சுவக்கீன், தொம்மைக்குட்டி, கபிரியேல் என்பவர்கள் பெரும் பங்களித்தவர்கள் என்று அறியக்கிடைக்கின்றது.


மெலிஞ்சிமுனை கூத்துக் கலைஞர்கள்

 இவர்களின் பின்னர் அ.சவிரிமுத்து, ம. அலைக்சாண்டர் ஆகியோர் எதுவித சலனமுமின்றி தென்மோடியின் சாரம் நீர்த்துப்போகாமல் மேற்படி தலைமுறையின் வாரிசுகளோடு பயணப்பட்டுக்கொண்டிருந்தனர். இவர்களில் ஆசீர்வாதம், சீரணி, ராயப்பு, பாக்கியநாதன், தோமாஸ், குருசுமுத்து, மரியநாயகம், சைமன், சீமான்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, தொம்மை, செபமாலை, நோவா, ராசு, விக்டர், பகளம், துரைசிங்கம், ஆசை போன்றவர்கள் குறிப்பிடத் தக்க கலைஞர்களாக இயங்கினர்.

அந்தோனி அண்ணாவி காலத்திலும், அவருக்குப் பின் வந்த காலத்திலும் ஒரு சுயம்புவாக உருவெடுத்த கி. சவிரிமுத்துவெனும் தாளச்சித்தன் தன் கலைத் தாகம் தணியாது தன் மரணகாலம் வரை மத்தளகாரனாகவே வாழ்ந்து மரித்தார். கூத்துகளோடு, கிறிஸ்தவப் பாடல்களுக்கும் ஆர்மோனியம் வாசித்ததன் மூலம் பிவி. பிரான்சிஸ், ப. விஜயநாதன் ஆகியோர் தம் கலைப் பங்களிப்பையும் செய்தார்கள். கி. சவிரிமுத்து அவர்களின் பின்னர் தொ. லோறன்ஸ் அவர்களும் மத்தளகாரனாய் இயங்கி வருகின்றார்.

அரசியல், சமூக மாற்றங்களை உள்வாங்கி அவற்றின் போக்கிற்கேற்ப அவர்களின் காலத்தைத் தொடர்ந்து கூத்துக் கலை அவர்களின் வழித்தோன்றல்களான ச. மிக்கேல்தாஸ், அ.ஜேசுதாசன், ச. ஜெயராஜா,  அ. ஜோண்சன், கி.லக்ஸ்மன், தமயந்தி, தொ.சந்திரன், ச.பீற்றர், பா. சிறில், செ.குயின்ரன், மெலிஞ்சிமுத்தன், சூ. றொபின்சன் போன்றவர்களால் கிராமத்திலும், புலம்பெயர் சூழலிலும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 

கூத்துக் கலையோடு பிற்காலத்தில் சமகாலச் சமூகநிலைப்பாடுகளை பேசுபொருளாய்க் கொண்ட நாடகங்களும் அரங்கேறத் தொடங்கின. நாடகப் பிரதி, பாடற் பிரதிகளை உருவாக்குவதில் பி. பிரான்ஸ்ஸிஸ் அவர்களும், அவரைத் தொடர்ந்து அ. ஜேசுதாசன், சந்தியாப்பிள்ளை ஆகியோரின் நாடகப் பிரதிகளும் அரங்கேறின. நாடகப் பிரதி உருவாக்கலில் ஆர்வங்கொண்ட அ.ஜேசுதாசன் பிற்காலத்தில் கூத்துப் பிரதிகளையும் எழுதத் தொடங்கினார்.

புலம்பெயர் சூழலில் ச. மிக்கேல்தாஸ் அவர்களின் பத்து கூத்துப் பிரதிகளும், தமயந்தியின் ஒரு கூத்துப் பிரதியும் நூலுருப் பெற்றிருக்கின்றன. அத்தோடு மெலிஞ்சிமுத்தனின் மூன்று கூத்துப் பிரதிகளும், ச. குயின்ரனின் ஒரு பிரதியும் மேடையேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் இலக்கியச் சூழலில் தமயந்தி, மெலிஞ்சிமுத்தன் ஆகியோரிடமிருந்து  ஒன்பது இலக்கியப் பிரதிகளும், ம.நீயூட்டன் அவர்களின் நான்கு அரசியற் பிரதிகளும் நூலுருப் பெற்றிருக்கின்றன. ஈழத்தில் ச. அசீஸ்குமாரின் ஒரு கவிதைத் தொகுப்பும் நூலுருப் பெற்றிருக்கிறது. புகைப்படக் கலையில் சிறந்து விளங்கும் தமயந்தி பல புகைப்படக் கண்காட்சிகளையும் தொடர்ந்து நடாத்தி வருகின்றார்.

மெலிஞ்சிமுனைக் கலையின் இன்னொரு பரிமாணத்தில் சமையற் கலையில் உயர்ந்து நிற்கும் ம. யேசுநேசனின் அபார வளர்ச்சியை நோக்க வேண்டியுள்ளது. ஒட்டுமொத்த இலங்கையுமே பெருமைப் படக்கூடிய விதத்தில் உலகத்தின் சமையற் கலை வல்லுனர்களின் வரிசையில் ஆறாம் நிலையில் இருக்கும் இவர் தன்னுடைய சமையற்கலையின் உத்திகள் மெலிஞ்சிமுனைக் கிராமத்தின் கருவறையில் இருந்தே தோன்றின என்று சொல்லிவருகிறார்.

மெலிஞ்சிமுனை ஈழத்தின் கலையால் தீட்டப்பட்டு கடலுக்குள் நீண்டு நிற்கும் மழுங்கா முனை என்பதற்கான ஆதாரங்களை இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். மெலிஞ்சிமுனையின் கலை ஒடுக்குமுறைகளின் பாறைகளை உடைத்து ஆணிவேரோடிய பெருவிருட்சமாய்  வெவ்வேறு தளங்களில் விரிந்து, பரந்து, கிளை விரித்து நிற்பதைப் பதிவு செய்வதில் உளம் பூரிக்கிறது. 

வாழ்க கலை, வளர்க பிற்போக்கறுத்த தமிழ்.

மெலிஞ்சிமுத்தன்.

குறிப்பு: இக்கட்டுரைக்கான சில தரவுகள் அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ்அவர்களின் சேகரிப்பிலிருந்து பாவிக்கப்பட்டுள்ளன.