சவரிமுத்து அண்ணாவியை மக்கள் ஏற்கனவே மதிப்பளித்து விட்டனர் – கருணாகரன் சிவராசா

1,148

சவரிமுத்து அண்ணாவியை மக்கள் ஏற்கனவே மதிப்பளித்து விட்டனர்

  • கருணாகரன் சிவராசா

மெலிஞ்சிமுனை கூத்துக்குப் பேர் பெற்ற இடம். அங்கே எல்லா வீடுகளிலும் நிச்சயமாக ஒரு கூத்துக் கலைஞர் இருப்பர். கூத்தில்லா வாழ்க்கை அவர்களுக்கில்லை. மிகச் சிறிய வயதிலேயே கூத்தில் ஈடுபடும் பாரம்பரியத்தை உடைய ஊர். இந்தக் கூத்துக் கலைஞர்களில் முக்கியமானவர் நீ.வ.அ. சவரிமுத்து அண்ணாவி.

உண்மையில் மெலிஞ்சிமுனையை ஒரு கலைக்கிராமமாக பிரகடனம் செய்ய வேணும்

கருணாகரன் சிவராசா

60 ஆண்டுகளுக்கும் மேலாக கூத்துக்குப் பங்களித்தவர். தமயந்தின் ஊக்கத்தினால் இவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீடியோவில் ஒரு நேர்காணல் செய்திருந்தோம். கூட இருந்தவர் இயல்வாணன்.அருமையானதோர் சந்திப்பு அது. முக்கியமான பதிவாக அந்த நேர்காணல் மாறியது. அதற்குக் காரணம் சவரிமுத்து அவர்கள் கூத்துப் பற்றிச் சொன்ன ஏராளமான விசயங்களே. நாங்களும் கூத்துப் பாரம்பரியத்தைப் பற்றி நிறைய விடயங்களை அறிந்து கொள்ள வாய்த்தது.அந்த வயதிலும் பாடியும் ஆடியும் காண்பித்தார். அவர் அரங்கில் ஆடியதை நான் முன்னர் பார்க்கவிலலையே என்ற கவலை ஏற்பட்டது. அன்று வேறு பல கலைஞர்களையும் நேர்காணல் செய்திருந்தோம். வேறு சிலரோடு உரையாடினோம். உண்மையில் மெலிஞ்சிமுனையை ஒரு கலைக்கிராமமாக பிரகடனம் செய்ய வேணும். கலாச்சார அமைச்சு அல்லது கலாச்சாரத் திணைக்களம் போன்றவை ஆண்டு தோறும் ஏராளமான நிதியை பயனற்ற முறையில் செலவு செய்கின்றன. அதைச் சரியான முறையில் பயன்படுத்த இப்படியான இடங்களைத் தேர்வு செய்து அங்கிருக்கும் கலைஞர்களை வளப்படுத்தலாம். கலையை அதன் மூலம் மேலும் வளர்த்தெடுக்க முடியும். ஆனால், அப்படிச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. குறைந்தது ஆவணப்படுத்தல்களையாவது செய்யலாம்.மிகப் பிந்தியே இவருக்கான கௌரவங்கள் கிடைத்தன.

2015 இல் யாழ் முத்து என்ற விருது முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் வழங்கப்பட்டது. ஆனால், சவரிமுத்து அண்ணாவியை மக்கள் ஏற்கனவே மதிப்பளித்து விட்டனர். சவரிமுத்துவின் பங்களிப்பு அவருடைய இழப்பில் தெரிகிறது. மெலிஞ்சிமுனைக்கும் கூத்துக் கலையைப் புரிந்து கொண்டவர்களுக்கும் அது ஆழமான இழப்பு.

பதியப்பட்ட திகதி: March 2, 2017 

வழியாக Karunagaran