சவிரிமுத்து அவர்கள் மெலிஞ்சிமுனை மண்ணிற்கு பெருமை சேர்த்தவர் – ஆசிரியர் அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை

செய்தி வெளியீடு : தமிழ் கத்தோலிக்க செய்தி – லங்கா செய்தி சேவை ஆசிரியர் அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை – ஊடக விரிவுரையாளர்
அண்ணாவி – கலைத்தென்றல் கலைவருணன் – கலைமாமணி – யாழ் முத்து – கலாகங்கை – கலாசமுத்திரம் நீ.வ.அ. சவிரிமுத்து அவர்கள் மெலிஞ்சிமுனை மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்
இம்மாத முற்பகுதியில் இறந்த அவரின் 93 ஆவது பிறந்த தினம் (12 மார்ச் 2017) இன்றாகும்
ஊடக விரிவுரையாளர் அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை
யாழ் கரம்பொன் மெலிஞ்சிமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நீ.வ.அ. சவிரிமுத்து அவர்கள் 02 மார்ச் 2017 அன்று (1924 – 2017) தனது 93ஆவது காலமான போது மெலிஞ்சிமுனைக் கிராமமே சோகமயமானது.
அவரின் இறுதிச் சடங்குகள் 06 மார்ச் 2017 அன்று மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய முன்றலில் நடைபெற்ற இரங்கற் கூட்டம் மற்றும் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியின் பின்னர் கரம்பொன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்று 12 மார்ச் 2017 அன்று அவரின் 93ஆவது பிறந்த தினமாகும.; மெலிஞ்சிமுனை மண்ணின் மைந்தன் அண்ணாவி நீ.வ.அ. சவிரிமுத்து அவர்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக கூத்துக்குப் பங்களிப்பு செய்த கலைஞர்.
90களில் கரம்பொன் மெலிஞ்சிமுனை பங்குத்தந்தையாக இருந்த போது மெலிஞ்சிமுனை மண்ணின் மைந்தன் அண்ணாவி நீ.வ.அ. சவிரிமுத்து அவர்களின் கூத்துக்குப் பங்களிப்பை அறிந்திருக்கிறேன். அவரின் கூத்து மேடையேற்றத்தில் பங்குபற்றியுள்ளேன்.
யாழ்ப்பாண தென்மோடிக்கூத்தின் பிதாமகனாக 1928ம் ஆண்டு முதல் கலைப்பணியாற்றிய கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்கள் மெலிஞ்சிமுனைக் கிராமத்துடன் மட்டும் நின்றுவிடாது யாழ்ப்பாணம், – முல்லைத்தீவு,- மன்னார் – மாதகல் – மண்டைதீவு – எழுவைதீவு – இளவாலை – பருத்தித்துறை – ஊர்காவற்றுறை – நாரந்தனை – கரம்பொன் – நாவாந்துறை ஆகிய இடங்களில் தென்மோடி நாடகப்பாங்கு கூத்தரங்குகளை நிகழ்த்தி கூத்தியலின் அடிப்படை வெளிப்பாடுகளை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் வரலாற்று பொறுப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார். அண்ணாவி கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்களின் மைந்தன் அந்தோனி சவிரிமுத்து ஆவார்.
கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்களின் மறைவுக்குப்பின் அவரின் கலைப்பணியை பொறுப்பேற்று 25 கூத்துகளுக்கு மேல் மேடையேற்றியுள்ளார் நீ.வ.அ. சவிரிமுத்து அவர்கள்.
அண்ணாவி நீ.வ.அ. சவிரிமுத்து அவர்கள் 1937ம் ஆண்டுமுதல் 1970ம் ஆண்டுவரை பலகூத்துக்களில் அரசபாத்திரங்களிலும் நடித்துப் பெருமை பெற்றவர். 2004 ஆம் ஆண்டு அண்ணாவியார் சவிரிமுத்து அவர்களின் கலைப்பணியை பாராட்டி ஆனந்தசீலன் நாடக விழாவில் கலைத்தென்றல் விருது வழங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு நோர்வே பேர்கன் ஈழத்தமிழர் சங்கம் பேர்கன் சிறுவர் பாடசாலை மாணவர்களைக்கொண்டு மேடையேற்றிய தாவீது கோலியாத்து நாடகமேடையில் கலைவருணன் விருது வழங்கி கௌரவித்தது.
2015ஆம் ஆண்டில் யாழ்மாவட்ட கலைகலாச்சாரப் பேரவையும் யாழ்மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய கலைகலாசார விழாவில் அண்ணாவி கலைமாமணி நீ.வ.அ. சவிரிமுத்து அவர்களுக்கு யாழ் முத்து என்ற விருது வட மாகாண முதலமைச்சர் மேதகு விக்கினேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு மன்னார் அரசாங்க அதிபர் எஸ்.எம்.எஸ் தேசப்பிரியா அவர்கள் தலைவராகவும் வட மாகாண முதலமைச்சர் மேதகு விக்கினேஸ்வரன் அவர்களை பிரதமவிருந்தினராக கொண்ட வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா 2016இல் முதலமைச்சர் விருதும் காசோலையும் வழங்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு கலாபூசணம் விருதைப்பெற்றுக் கொண்ட இவர் இறந்தபின் நடந்த பூதவுடல் அஞ்சலியின் போது நோர்வே கூத்துப்பட்டறையால் கலாகங்கை விருதும் மெலிஞ்சிமுனை கலைக்குருசில் கலாமன்ற கூத்துக்கலைஞர்களால் கலாசமுத்திரம் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இறந்தவர்களுக்கு அவர்கள் இறப்பின் பின்னர் நடப்பது தெரியாது – அது உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமே பாடமாகவும் படிப்பினையாகவும் எப்படி வாழவேண்டும் என் மேல்வரிச் சட்டமாகவும் அமையும்.
அண்ணாவி – கலைத்தென்றல் கலைவருணன் – கலைமாமணி – யாழ் முத்து – கலாகங்கை – கலாசமுத்திரம் நீ.வ.அ. சவிரிமுத்து அவர்களின் ஆன்மா இறைவனின் இன்ப சந்நிதானத்தில் அமைதியில் இளைப்பாறட்டும்