சென்னையில் இடம்பெற்ற மாவீரன் பண்டாரவன்னியன் – கண்ணகி நூல் வெளியீட்டு விழா

0 101

பண்டைக் காலத்தில் இயல், இசை, நாடக முப்பகுதிக்குரியதாய் விளங்கிய செந்தமிழின் அணிகலனாய், இலக்கணமாய் நாடகத் தமிழெனும் கூத்து விளங்கியது. எனவே கூத்து தமிழரின் அடையாளமாகவும் பண்பாட்டுச் சின்னமாகவும் திகழ்கின்றது.

ஈழத்தில் வீரியம் பெற்ற இரு கூத்துக் கலை வடிவங்களாவன- ஒன்று தென்மோடிக் கூத்து, மற்றையது வடமோடிக் கூத்தாகும். பேச்சு வழக்கில் வட பாங்கு, தென்பாங்கு எனும் அடையாளப் படுத்தலாக வழக்குரைக்கப் படுகின்றது.

கனடா வாழ் ஈழத்து கூத்துக் கலைஞரான அண்ணாவியார் திரு.ச.மிக்கேல்தாஸ் எழுதிய “மாவீரன் பண்டாரவன்னியன்”, மற்றும் “கண்ணகி” என்னும் தென்மோடிக் கூத்து வடிவிலான ஈழத்தின் பாரம்பரிய கூத்துக் கலை நூலின் வெளியீட்டுவிழா தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் 21-02-2015 அன்று கவிக்கோ மன்றத்தில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது.

தமிழரின் புராதன இசைக்கருவியான தப்பு எனப்படும் பறையிசை, மாற்று நாடக இயக்கத் தலைவர் பேராசிரியர் கி.பார்த்திபராசா தலைமையில் மாற்று இயக்க மாணவர்களினால் புதிய உத்வேக எழிற்சியுடன் ஆடப்பட்டது. அருகி வரும் இத்தாளக்கட்டும் ஆட்டமுறைமையும், அவையில் அறிமுகம் செய்தமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

தொடர்ந்து வரவேற்புரையை நோர்வேயிலிருந்து விழாவில் கலந்து கொண்ட அண்ணாவியார் ச.ஜெயராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தலைமையுரையாற்றிய எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள்- அண்ணாவியார் ச.மிக்கேல்தாசின் நூலின் திறன் குறித்தும், கருத்தாளம் பற்றியும் விளக்கியதுடன், இவர்கள் தொடர்ந்து நான்கு தலைமுறைகளாக இக்கலையை அழியாமல் பாதுகாத்து வளர்த்துவரும் அக்கறை குறித்து விளக்கினார்.

அருட்தந்தை வீனஸ் செபஸ்ரின் அவர்கள் தமது ஆசியுரையில் ஆடலும், பாடலும் மனிதனை மகிழ்விக்கும் கலையாகும். “பண்டாரவன்னியன்”, “கண்ணகி” வரலாற்றை தமிழ் மரபுக் கலையான கூத்து வடிவத்தில் சமூகத்திற்க்கு ஏற்றவாறு படைத்திருப்பதாகவும், எனது குடும்பத்தை சேர்ந்த இவர்கள் இக்கலையை தொடர்ந்து பேணிக்காத்து வருவது பெருமைக்குரியது என்றார்.

கவிஞர் இன்குலாப் அவர்கள் தனது உரையில் வடமோடிக்கூத்து துன்பியல் சார்ந்ததாகவும், தென்மோடி இன்பியலாகவும் இருக்கும் எனக்கூறப்படுகிறது. புலம்பெயர் நாடுகளிலும் இக்கூத்து கலையை தொடந்து முன்னெடுத்து கட்டிக்காத்து வளர்ப்பது நெகிழ்வைத்தருகின்றது என்றார்.

பேராசிரியரும் நாடக செயற்பாட்டாளருமான அ.மங்கை அவர்கள் தமது உரையில், கிழக்கிலங்கை மட்டக்கிளப்பில் கண்ணகி சூளூர்த்தி மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். அதேபோல் வன்னி வற்றாப்பளையிலும் கண்ணகிக்கு விழா எடுப்பார்கள். வெளிவரும் பண்டாரவன்னியன், கண்ணகி நூல்கள் சொல் வீச்சும், கவிச்சுவையும் குன்றாமல் ஓர் அரிய வரலாற்றுப் படைப்பாக அண்ணாவியார் அளித்துள்ளார் என எடுத்துரைத்தார்.

அடுத்து உரையாற்றிய தஞ்சை தமிழ் பல்கலைக் கழக நாடகத்துறை தலைவரும் பேராசிரியருமான மு.ராமசாமி அவர்கள்- தமிழன் எதிரிகளால் வீழ்ந்ததை விட துரோகிகளால் வீழ்ந்த கதைதான் அதிகம், அதை இந்நூலில் பண்டார வன்னியன், காக்கை வன்னியன் பாத்திரங்களின் பாடல் வழிமூலமாகவும், காதல், வீரம், சோகம், என்பவற்றை நாடக மொழியில் மண்ணின் உணர்வுகளுடன் சிறப்பாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

நூலாசிரியர் அண்ணாவியாரின் ஏற்ப்புரையை அடுத்து நிறைவுரையாற்றிய கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்- தன் ஈழத்து மக்களிடையே பெற்றிருந்த முக்கித்துவம் பற்றியும் எடுத்து கூறியதுடன், அந்நாளில் கூத்துக்களை விடிய விடிய இருந்து பார்த்துச் சுவைத்தவன் என்ற உணர்வோடு, அண்ணாவியார் மிக்கேல்தாஸ் இந்நூலை மிகவும் சிறப்பாக வரலாற்று வடிவமாக புதிய உயிர்த்துடிப்போடு தொன்மை மிகு இக் கலையை தமிழுலகிற்க்கு அளித்திருக்கின்றார் எனக் கூறினார்.

நூலாசிரியர் அண்ணாவியார் ச.மிக்கேல்தாசிற்கு கவிஞர் காசி ஆனந்தனும், அவரது சகோதரர் அண்ணாவியார் ச.ஜெயராஜாவுக்கு கவிஞர் இன்குலாப்பும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். பின்பு நூலாசிரியரும், அவரது சகோதரரும் விழா விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி சிறப்பு செய்தனர். அடுத்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வெளியிடப்பட்ட “மாவீரன் பண்டாரவன்னியன்”, “கண்ணகி” நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

 

a11 a21 a31 a41

 

 

aa5

 

 

SOURCES 

TamilCNN

Tamilnewsnet.com

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.